-
ஸ்ரீதேவி, ஒருங்கிணைந்த
உயிரித்தொழில்நுட்பம் - இரண்டாம் ஆண்டு மற்றும்
உதயா ஶ்ரீ ரா, வேதிப்பொறியியல் முதலாம் ஆண்டு
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர், பாவேந்தர் பாரதிதாசன்! "தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்று தமிழ்ப் பற்றினை தனது உயிருக்குப் பறைசாற்றுகிறார் பாவேந்தர்!
தமிழ் வளர்த்த இம் மாமனிதரின் வாழ்க்கை, தமிழுக்கானது என்றால் அது மிகையல்ல.
“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே, வெளியில் வா!
எலியென உனை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியென செயல் செய்யப் புறப்படு வெளியில்!” - என்று தமிழனை சமூக மறுமலர்ச்சிக்கும், புதுயுகம் புலர்வதற்கும் பூபாளம் பாடிய பெருமை பாவேந்தர் பாரதிதாசனுக்கே! வீழ்ச்சியுற்று, விசையொடிந்து போய்க்கிடந்த தமிழனைத் தன் பேனா முனையால் மூவாத் தமிழெடுத்து, நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி, மீண்டும் வீறுகொண்டு எழுச்செய்தார்.
இவரது கவிதைகளுக்கு எப்பொழுதும் தனித்துவம் உண்டு. எளிமையான சொற்கள் நிறைந்த இவரின் கவிதைகள், பலரின் எண்ணங்களைத் தூண்ட வைக்கும் ஊன்றுகோல்! இவரது வலிமையான கருத்துகளும், எளிமையான சொற்களும், திறமையான வாக்கியங்களும் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதில் கடுகளவும் அய்யமில்லை!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே!" - என்று
தமிழையும் தாய்மொழியையும், தன் இரு கண்களாய், என்றைக்கும் ஆழமாய் நேசிக்க வேண்டும் என்று உணர்த்திச் சென்ற இவரின் தடம் என்றைக்கும் எம் மனதில் ஆழமாய் பதிந்திருக்கும்.
தமிழரின் பண்பாடு இன்றும் நிலைப்பதற்கு பாரதிதாசனுக்குப் பெரும்பங்கு உண்டு.
இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிஞன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற அவர்தம் கவிதையின் கூற்றுகிணங்கவே, என்றும் நம்முடன் நிலைத்திருப்பார்.
வளரும் இளைஞர்களிடயே புரட்சியுருவில் என்றும் வாழும் நம் பாவேந்தர் பாரதிதாசனின் க௩௨ஆம் பிறந்த நாளை நினைவு கொண்டு பெருமிதம் கொள்கிறது, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம்!
ความคิดเห็น