- திரிவேணி. மோ
பெண்ணாகப் பிறந்தால் துணி துவைக்க வேண்டும், வீடு முழுவதையும் கூட்டி பெருக்க வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும், திருமணம் முடிந்தால் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும், அங்கு உள்ளவர்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு, அவர்கள் விரும்புவதைச் சமைக்க வேண்டும் எனப் பலப் பொறுப்புகள் உள்ளது! இதையே தன் வாழ் நாள் முழுக்க ஒரு பெண்ணால் செய்ய முடியுமா? அவளுக்கென்று நேரம் ஒதுக்க முடியாதா? அவள் விருப்பத்திற்கேற்ப ஏதும் நடக்காதா? என்ற கேள்விகளுக்கு இன்றும் நம் இந்திய சமூகத்தில் பதில் கிட்டவில்லை. சமீபத்தில் வெளியான 𝗧𝗛𝗘 𝗚𝗥𝗘𝗔𝗧 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗞𝗜𝗧𝗖𝗛𝗘𝗡 என்னும் மலையாளத் திரைப்படத்தில், நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் துல்லியமாக, வெட்ட வெளிச்சமாகக் காட்சிபடுத்தியிருகிறார், இயக்குனர் ஜோ பேபி.
வெறும் நூறு நிமிடம் மட்டுமே இருக்கும் இந்தத் திரைப்படம் இந்தியக் குடும்பப் பெண்களின் நூற்றாண்டு கால வலியைப் பேசுகிறது. ஆண்களின் ஆணவம், பெண்ணடிமைத்தனம், பெண்கள் மாதவிடாயின் போது சந்திக்கும் இன்னல்கள் எனப் பலவற்றை நறுக்கென்று இந்தப்படம் கூறியிருக்கிறது. தூங்கி எழுகிறாள், சமையல் செய்கிறாள்,உண்ட பாத்திரங்களைக் சுத்தம் செய்கிறாள், உறங்குகிறாள். மீண்டும் காலையில் எழுகிறாள்,தேநீர் போடுகிறாள், சமையல் செய்கிறாள், உண்ட பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறாள், உறங்குகிறாள்.அவள் செய்யும் வேலைகளை இரண்டு முறை படிப்பதற்கே நமக்கு சலிப்புத்தன்மை ஏற்படுகிறதெனில், தன் வாழ்நாளின் கடைசி நொடி வரை சலிக்காமல் இவ்வேலைகளைச் செய்யும் நம் தாயை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாளாவது குப்பையை எடுத்துக் குப்பைத்தொட்டியில் கொட்டியிருப்போமா? வேறொருவர் சாப்பிட்டத் தட்டிலுள்ள மிச்ச மீதிகளைத் தன் கையால் எடுத்து அகற்றிவிட்டு அதைக் கழுவுவது எவ்வளவு அருவெறுப்பை உண்டாக்கும் என்பதை இப்படத்தின் காட்சிகள் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருக்கிறது. கணவனிடம், தனக்கு உடலுறவின் போது வலி ஏற்படுகிறது என்று மனைவி கூறியும், அவளின் விருப்பம் இல்லாமல் மேலும் தொடர்கிறார். இதை படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறதென்று தெரியவில்லை. ஆனால் படமாகப் பார்க்கும் போது என் கண்கள் கலங்கிவிட்டது! சமஉரிமை என்பது எல்லா இடத்திலும் இரு பாலருக்கும் பொருந்தும். பெண்களின் கனவுப் பாதையில், சில ஆண்களானவர்கள் வழிகாட்டியாய் இல்லாவிட்டாலும் முட்களாய் இல்லாமல் இருந்தாலே மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகும். இந்தப் பதிவைப் படித்தப் பிறகு, இனி வரும் காலங்களில், குறைந்தபட்சம், நீங்கள் சாப்பிட்டத் தட்டை நீங்களே கழுவி வைத்தாலே, இந்தப் படத்திற்கும் என் பதிவிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
பெண்கள் சம உரிமை தினமான இந்நாள் முதல், "ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை" என்று சொல்லி வாழ்வோம்! சமத்துவத்தைப் போற்றுவோம்!
நன்றி!
Comments