எழுத்து - அக்ஷயா. தி -இளங்கலை வேளாண்மை (2019) மற்றும்
இர. சாமிஷா -முதுகலை -கணினி அறிவியல் (2019)
தஞ்சாவூர் மாவட்டம் உத்தமதானபுரம் கிராமத்தில் வேங்கடசுப்பையா - சரசுவதி தம்பதியருக்கு பிப்ரவரி 19ஆம் தேதி மகவாகப் பிறந்தார்,
தமிழ்த்தாத்தா எனப்படும் உ. வே. சாமிநாதய்யர். அழிந்துவிடும் நிலையில் இருந்த சங்க கால தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தேடி கண்டறிந்து பதிப்பித்தார். இவரின் அயராத உழைப்பு இல்லாவிடில், நம் தமிழ் இலக்கியங்கள் பல காணாமல் போயிருக்கும். ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் அச்சிட்டு, பதிப்பித்த பெருமை இவரையே சேரும். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டியவர். இவர் தமிழுக்காற்றிய தொண்டினால் "தமிழ்த்தாத்தா" என அன்போடு அழைக்கப்பட்டார். இவர் மறைந்த ஒலைச்சுவடிகளைப் பதிப்பித்ததோடு மட்டுமல்லாமல் அவற்றில் மறைந்த எழுத்துக்களையும் அறிந்து, முழுமையான பொருள் விளங்குமாறு செய்தார். இவரின் இளமை பருவத்தில் யாராவது ஆங்கிலமும் வடமொழியும் உலக வாழ்க்கைக்கு பயன்படும் என்று கூறினால், தாய் தமிழே சிறந்தது என்று தமிழ் மொழியைச் சிறப்பாகக் கூறுவார். இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் கற்று, தமிழறிஞர் ஆனார். இவரின் குடும்ப வறுமை காரணமாக ஊர் ஊராகச் சென்று இடம் பெயர்ந்த போதிலும், தமிழின் மேல் உள்ள பற்றும், உறுதியான மனமும் விடாமுயற்சியும் இவர் தமிழ் கற்பதிலிருந்து நிறுத்திவிடவில்லை. தன் தமிழ் ஆசிரியர் இருக்கும் இடம் அறிந்து அங்கு குடியேறுவிடுவார். ஊர்கள் பல மாறினாலும், தான் செல்லும் இடமெல்லாம் தமிழ் படித்த புலவர் உள்ளாரா? நம்மால் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் இவர் மனம் சிந்திக்கும். சென்னை பல்கலைக்கழகம் இவரின் தமிழ் பணியைப் பாராட்டி, 'மகாமகோபத்தியார்' என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. "குடந்தை நகர்க் கலைஞர் கோவே பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
சிறப்பின்றித் துலங்குவாயே" - என்று பாரதியார் இவரைப் பாராட்டினார். இத்துணை சிறப்புகள் செய்த நம் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதய்யரை அவர்களின் பிறந்த தினத்தில் நினைவு கொண்டு உவகை கொள்கிறது நம் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம்.
コメント