By பா. மதுமிதா- B.Tech ECE (2020)
மனிதர்களின் பலப் பணிகளுக்கிடையில் பசி எனும் பகைவனின் இடையூறால் மறந்த தகவல்கள் பல உண்டு . அதனால் தானோ “ பசி வந்தால் பத்தும் பறந்து போகும் “ என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்! பசியோடு இவ்வாக்கும் அவ்வப்போது நம் மனதில் தோன்றுவதும் உண்டுதானோ..?
அத்தகைய பசி எனும் பிணிக்கு அருமருந்தாக அமைவது நாம் அன்றாடம் உண்ணும் உணவே. ஆகையால் தான் “உணவே மருந்து” எனக் கூறலாயிற்று போலிருக்கிறது!
“உண்டி முதற்கே உலகு" என்பது உலகிற்கு வள்ளுவர் அளித்த உண்மை. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாகவும், விருப்பமுள்ளதாகவும் அமைவது உணவே.
நாம் உண்ணும் உணவு பசி போக்குவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியம் அளிப்பதாக அமைந்தால் சிறப்புதானே! ஆம், நம் தமிழகத்தில் உணவானது தொன்று தொட்டு மருத்துவ முறையில் சமைக்கப்படுகிறது. உதாரணமாக , நம் அன்றாடச் சமையலில் கூட்டுவனவற்றுள் மஞ்சள், மார்புச் சளியை அகற்றும் , சீரகம் வயிற்றுச் சூட்டைத்தணிக்கும், மிளகு, தொண்டைக் கட்டைத் தொலைக்கும். பூண்டு , வளியகற்றி , வயிற்றுப்பொருமலை நீிக்கிப் பசியை மிகுவிக்கும் . வெங்காயம், குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும். இஞ்சி, பித்தத்தை ஒடுக்கி, காய்ச்சலை கண்டிக்கும் எனக் கூற ஏராளம் உண்டு, அவற்றுள் மருத்துவப் பயனும் தாராளமாக உண்டு.
ஆனால், இன்றைய கணினி உலகத்திலோ, உணவே மருந்தாக விளங்கிய காலம் கப்பலேரி சென்றுவிட்டது போயிற்று போலிருக்கோ? ஆம், இன்று நாம் உண்ணும் உணவானது ஆரோகியத்திற்காக அன்றிச் சுவைக்காக உண்ணும் நடைமுறையே நிலவுகிறது. அதனோடு மட்டுமல்லாமல், அட்டைப்பெட்டிகளிலும், வண்ணத்தாள்களிலும், பதப்படுத்தி அடைத்த ஆயத்த உணவுகள், துரித உணவுகள் எனக் காலத்திற்கேற்ற மாற்றத்தின் காரணமாகவும், வர்ணமிகு விளம்பரங்களின் மீதான பற்றின் விளைவாகவும் பல வழக்கத்துக்கு வந்துள்ளன. சுவை கூட்டும் ஆவலில் நோய்களை அல்லவா பெருக்கிக்கொண்டிருக்கிறோம்! , உணவுடன் சேர்த்து மாத்திரை மருந்துகளை உண்ணும் நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டிருக்கிறோம்!
இன்று தமிழர்களின் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள், கருப்பனை கூட்டி நிலத்தினை உழுது , கதிரவனை வணங்கி நட்டி வைத்த நாத்தும், காவேரித் தாயின் அருளாலே வளரத் தொடங்கி விளைந்து நிற்கும் நெற்மணிகளை அறுவடை செய்யும் உன்னத திங்கள். உழைப்பின் உன்னதத்தைப் போற்றும் இத்தைத் திருநாள் முதற்கொண்டு, பதப்படுத்திய துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு ஆயுளைப் பெருக்குவோம்! உழவர்களின் உழைப்பை போற்றுவோம்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Comments