by Vedha Nadarajan - B.Tech Software Technology (2016)
தமிழ் மொழி காணாதது என எதுவும் உண்டோ? கிடைத்திட்ட முதல் நூலே தொல்காப்பியம் எனும் இலக்கண நூல். அதன் பழமை ஒரு புறம் இருக்கட்டும். அதன் கருத்துச் செழுமையை எங்கனம் விவரிப்பது. மொழிக்கு மட்டும் இன்றி மாந்தர் வாழ்வியலுக்கும் இலக்கணம் படைத்த ஒரே மொழி. எங்கள் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ். அகம் புறம் என தன் மொழியைக் கொண்டு வாழ்வியல் நெறிகளை வடித்தவன் ஆதித்தமிழன். அக இலக்கியங்களில் இல் வாழ்வியலை அழகுற அமைக்க வழி சொன்ன தமிழ், புற இலக்கியங்களில் நாடு, போர், மக்கள் சமுதாய அமைப்பு பற்றி பேசுகிறது. தமிழை மதச்சார்பற்ற மொழி என்றே கூறலாம். உலகில் உள்ள அத்தனைப் பெரு மதங்களைப் பற்றிய இலக்கியங்களும் பொதிந்த ஒரே மொழி தமிழ். காப்பிய வளங்களைச் சொல்லி மாளாது. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் இவ்வாறு பேசிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் மக்கள் வாழ்வியலைச் சார்ந்தே உள்ளது. காரணம் நம் தமிழ் மக்கள் மொழி. அதை எந்தவொரு சிறு பிரிவுக்குள்ளும் அடக்கிட முடியாது. உலகில் பல மொழிகள் அழிவுற்ற போதும் இன்னும் சிறப்புடன் இளமை, வளமை மாறாமல் விளங்க தமிழ் மக்கள் மொழி எனும் ஒன்று தான் காரணம். கலைகளை வளர்த்த மொழி. இயல் இசை நாடகம் என பல்வகைக் கலைகளை வளர்த்த மொழி தமிழ். கவிஞனுக்கும் கவியைச் சுவைப்பவனுக்குமே தெரியும் தமிழின் சுவைக்கு இவ்வையத்தில் வேறொன்றும் ஈடில்லை என்று. இத்தனை பேறு பெற்ற தமிழ் இந்தக் கணினி காலத்திலும் தன் கால் தடத்தை பதிக்காமல் இல்லை. ஆங்கிலம் தவிர்த்து இந்திய மொழிகளில் அதிகம் இணையத்தில் புழங்கும் மொழி எனும் பெருமை பெற்றது தமிழ் மொழி. தமிழுக்கு அழிவேயில்லை. வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே.
コメント